இந்தக் காலத்தின் சிறப்பு என்னவென்றால், இது காலங்களின் நிறைவின் காலம். முந்தைய காலங்கள் அனைத்தும் பகுதியானவையும், நிறைவற்றவையும், திருப்தியற்றவையுமாக இருந்தன. அவை ஒரு அளவுவரை வந்து, அதற்கு மேல் போக முடியாமல், தேவனுடைய கிரியைகளின் அடுத்த கட்டத்திற்காகக் காத்திருந்தன. ஆனால் இந்தக் காலத்திலேயே நித்திய தேவன் தம்முடைய கிரியையை நிறைவேற்றி, யாவற்றையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பார் (எபேசியர் 1:10). இந்தக் காலத்தில் காலங்கள் நிறைவடைகின்றன. மற்ற யுகங்களில் நிறைவையும் முடிவையும் பூரணத்தையும் அடையாதவையெல்லாம் இந்தக் காலத்தில் நிறைவாகவும் பூரணமாகவும் ஆக்கப்படும்.
இந்தக் காலம் கடந்த எல்லாக் காலங்களையும் நோக்குகிறது; வரப்போகும் காலங்களையும் நோக்குகிறது. வரும் காலங்கள் தங்கள் தன்மையையும் இயல்பையும் இந்தக் காலத்திலிருந்தே பெறும். கடந்த காலங்களும் வரும் காலங்களும் இந்தக் காலத்தில் சந்திக்கின்றன.
மற்ற காலங்கள் யாவும் பங்குபங்காகவும் வகைவகையாகவும் இருந்தன (எபிரெயர் 1:1); ஆனால் இந்தக் காலம் கிறிஸ்துவின் முழு அர்த்தத்தினால் ஆளப்படுகிறது. பரலோகத்திலுள்ளவைகளையும் பூலோகத்திலுள்ளவைகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற ஒரே தலையின்கீழ் இந்தக் காலம் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கும்.
இந்தக் காலம் பரிசுத்த ஆவியானவரின் காலம். தேவனுடைய நித்திய நோக்கத்தின் பொறுப்பாளர் அவரே. தம்முடைய பரந்த நோக்கத்தின் எந்தப் பகுதியையும் நிறைவேற்ற தேவன் செயல்பட்டபோதெல்லாம், பரிசுத்த ஆவியானவர் மூலமாகவே அதைச் செய்திருக்கிறார். தேவன் எப்போதெல்லாம் எதைச் செய்ய எடுத்துக்கொண்டாரோ, அதன் ஞானமும், வல்லமையும், சக்தியும், தொடங்குகிறவரும், தாங்குகிறவரும், நிறைவேற்றுகிறவரும் தேவ ஆவியானவரே. இந்த அண்டத்தின் படைப்பிலேயே இதைக் காண்கிறோம்: இந்தப் பிரபஞ்ச ஒழுங்கு உருவானதில் தேவ ஆவியானவரே தொடங்கி, நிறைந்து, நடத்தி, எப்போதும் வெளிப்பட்டவராக இருந்தார். புதிய ஆவிக்குரிய பிரபஞ்சம் உருவாவதிலும் அப்படியே இருக்கும்.
தேவ ஆவியானவர் இல்லாமல், இந்தக் காலத்திற்கான தேவனுடைய பெரிய நோக்கத்தின் எந்தப் பகுதியையும் நிறைவேற்ற மனிதனால் முற்றிலும் இயலாது; அதில் எந்தப் பகுதியும் மனிதனால் நிறைவேறாது. இந்தக் காலத்தின் தொடக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் வந்தது, தேவன் தம்முடைய கிரியையைத் தாமே செய்ய வேண்டும், இல்லையெனில் அது ஒருபோதும் நிறைவேறாது என்ற தெய்வீக அறிவிப்பாகும்!